புதுடெல்லி: அணை திறப்பு உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் தெலங்கானா, ஒடிசா, காஷ்மீர் மாநில முதல்வர்கள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவைப் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டு மக்களின் மனஉறுதி அதிகரித்துள்ளது. மக்கள் குறைந்த நேரத்தில் அதிக தூரத்தை கடக்க விரும்புகிறார்கள். இதனால் அதிவேக ரயில்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது, 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 136-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. எனவே, இந்தியாவில் முதல் புல்லட் ரயில் தொடங்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த புத்தாண்டில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வேகத்தை இந்தியா அதிகரித்துள்ளது.
உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குதல், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையை ஆதரிப்பது ஆகியவை ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் யோசனைகள். நாடு முழுவதும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணியும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.