மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் உள்ளிட்டோரை பிரதமர் மோடி வரவேற்றனர்.

நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர், அதன் பின்னர் மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய மருத்துவமனையில் 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவுகள் மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்கள் உள்ளன.
பிரதமர் மோடி பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தனது 100வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதாகவும், அடுத்த மாதம் அம்பேத்கரின் பிறந்த நாளும் வரும் என்றும் குறிப்பிட்டார். மேலும், நவராத்திரி மற்றும் அனைத்து பண்டிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டின் அனைத்து குடிமக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெறுவது எங்கள் முன்னுரிமை. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்தியா, உலகில் எங்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், முழு மனதுடன் சேவை செய்ய முன்வருகிறது.”
மேலும், “இந்திய இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவின் இலக்கை நோக்கி முன்னேறி செல்கின்றனர்” என்று கூறினார்.
பிரதமர் மோடி, சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் திறந்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.