புதுடில்லி: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்து நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த விபத்து நடந்த பகுதியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து சிதறியது.

இந்தத் துயரமான சம்பவத்தில், விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உயிரிழந்தனர். மிகவும் அதிர்ஷ்டசாலியாக ஒரே ஒருவர் மட்டுமே விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். மேலும், அந்த விமானம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதியதால், சில மாணவர்களும் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழலில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறு பவர்கள் அனேகமாக உள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் நிலைமையை மதிப்பீடு செய்தனர்.
இன்று, பிரதமர் மோடி ஆமதாபாத் சென்று, விமான விபத்து நடந்த இடத்தையும், மீட்பு பணிகள் நடைபெறும் பகுதிகளையும் பார்வையிட உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறும் திட்டமும் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், சிகிச்சை பெறும் படுக்கையில் உள்ளவர்களையும் சந்தித்து மருத்துவமனையில் அவர்கள் நிலையை பார்வையிடும் வாய்ப்பும் இருக்கிறது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு நிலைகள் மற்றும் விமான நிலைய சீரமைப்புகள் குறித்தும் பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த பெரும் விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் இருந்து விமானத்தின் பிளாக் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் இரங்கல் மற்றும் கவலையுடன் பார்க்கப்படும் இந்த நிகழ்வு மீதான மத்திய அரசின் நடவடிக்கையை இன்று பிரதமரின் நேரடி பார்வையுடன் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.