புதுடில்லி: மேகவெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 11) செல்கிறார்.
கடந்த 5ம் தேதி உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் பெய்த அதிதீவிர மழையால், மலைப்பகுதிகளில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் வீடின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். நாளை மாலை 4.15 மணிக்கு டேராடூனில் தரையிறங்கும் அவர், ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். அதன் பின் மாலை 5 மணியளவில் மாநில உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதற்கு முன், காலை 11.30 மணியளவில் வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ள மோடி, பின்னர் நேரடியாக உத்தராகண்ட் பயணமாகிறார். வெள்ளத்தால் சிதைந்த மாநில மக்களின் பிரச்சினைகளை புரிந்து, விரைவான உதவி நடவடிக்கைகளை உறுதி செய்வது அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.