புதுடில்லி: இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் தலைவராக தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக முதல் முறையாக பதவி ஏற்ற அவர், 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக நாட்டை வழிநடத்தி வருகிறார். இதன் மூலம், மாநிலம் முதல் மத்திய அரசு வரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்த சிறப்பான தருணத்தை முன்னிட்டு, மோடி சமூக வலைதளத்தில் தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். “2001ல் குஜராத் முதல்வராக பதவி ஏற்ற நாளை இன்றும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாள் எனக்குப் பெருமையாகும். நாட்டின் மக்களின் ஆதரவும், அவர்களின் ஆசீர்வாதங்களுமே எனது வலிமை,” என குறிப்பிட்டார்.
மோடி தனது பதிவில் தனது தாயின் சொற்களையும் நினைவுகூர்ந்தார். “நீ எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்; ஒருபோதும் லஞ்சம் வாங்கக்கூடாது,” என என் தாய் கூறியது இன்று வரை வழிகாட்டியாக இருக்கிறது,” என்றார். மேலும், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உலகளவில் வலுவான பொருளாதார நாடாக உயர்ந்துள்ளதாகவும், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் தலைமையில் சுகாதாரம், விவசாயம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், “நம் தேசத்தை தற்சார்பு அடையச் செய்வது எனது குறிக்கோள். 2047ஆம் ஆண்டில் இந்தியாவை முன்னணி உலக நாடாக மாற்றுவோம்,” என மோடி தெரிவித்தார். இந்தக் குறிப்பு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வாழ்த்துகளும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.