புதுடில்லி: நாட்டில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வளர்ந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நான்கு அடுக்குகளாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி தற்போது இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கான பொருட்கள் மற்றும் மின்சாதனங்களின் விலைகள் குறைவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு வெளியிட்ட தனது பதிவில், மக்கள் வாழ்வில் வலிமை மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் சக்தியாக இந்த பண்டிகை அமைய வேண்டும் என்றும், ஜிஎஸ்டி குறைப்பு இந்த கொண்டாட்டத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக மாற்றும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நேரத்தில் சுதேசி பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மேலும், தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும் பாதையில் நாம் ஒன்றிணைவோம் என்றும், அதற்கான உறுதியை மக்கள் அனைவரும் ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சி, நம்பிக்கை, தன்னிறைவு ஆகியவை இந்தியாவை உலக அரங்கில் வலுவான நாடாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவராத்திரியின் ஆன்மிகத் தன்மையை எடுத்துக்காட்டி, பண்டிட் ஜஸ்ராஜின் பக்தி பாடலை பகிர்ந்து கொண்டார். மக்கள் தாங்கள் பாடிய பஜனை வீடியோக்களை அவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும், அவற்றில் சிலவற்றை வரவிருக்கும் நாட்களில் தானும் வெளியிடுவேன் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நவராத்திரி ஆன்மீகமும், நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் ஒருங்கிணையும் வகையில் பிரதமர் தனது செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.