பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக டிரினிடாட் அன்ட் டொபாகோவின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸெசார் அவரை பாரம்பரிய முறையில் வரவேற்றார். தனது வருகையின் போது, அங்கு வாழும் இந்திய வம்சாவளியர்களை சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பு உணர்வுப் பெருக்கத்தில் நிகழ்ந்தது. இந்தியாவின் கலாசாரத்தை தங்களின் நாளும் வாழ்கையில் தொடரும் இந்திய வம்சாவளியர்களை மோடி பாராட்டினார்.

மோடி தனது உரையில் ராம பக்தி குறித்து குறிப்பிட்டார். “இங்கு உள்ள ராமர் கோவில்கள் தனித்துவம் வாய்ந்தவை. நீங்கள் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு திரும்பிய ராமரை வரவேற்றீர்கள். கோவிலுக்காக புனித தீர்த்தங்கள் அனுப்பிய உங்கள் பக்தி உணர்வுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார். மேலும், சரயு நதியின் தீர்த்தத்தையும், அயோத்தி கோவிலின் சிலையையும் டிரினிடாட் பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.
மேலும் மோடி, “இந்தியாவின் வாரணாசி, பட்னா, டெல்லி போன்ற நகரங்களின் பெயர்கள் இங்கு தெருக்களில் உள்ளது. நவராத்திரி, மகாசிவராத்திரி, ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகள் இங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றன. இவை புவியியல் எல்லைகளை கடந்து, தலைமுறைகளை இணைக்கும் நம் கலாசாரத்தின் சான்றுகள்,” எனக் கூறினார். இளைய தலைமுறையின் கண்களில் கலாசார ஆர்வம் மற்றும் உறுதி காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தம் நாடுகளை விட்டு சென்றாலும், தம் ஆன்மாவை இந்திய பாரம்பரியத்தில் வைப்பவர்கள் என இந்திய வம்சாவளியர்களை பெருமைப்படுத்தினார் மோடி. “நீங்கள் வெறும் புலம்பெயர்ந்தவர்கள் அல்ல, இந்தியாவின் மதிப்புகளின் தூதர்கள். உங்கள் பங்களிப்பு இந்த நாட்டிற்கு கலாசார, பொருளாதார, ஆன்மீக ரீதியாக பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.