விந்தோக்கில் நமீபியா பார்லிமென்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பின் மகத்துவத்தையும், ஜனநாயகத்தின் சக்தியையும் வலியுறுத்தினார். “ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தி,” என்று அவர் கூறினார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த தன்னைபோன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் பெருமை எனும் உண்மையை பகிர்ந்தார். நமீபியாவின் பார்லிமென்டில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நமீபியாவின் முதல் பெண் அதிபரை தேர்வு செய்த நிகழ்வை பாராட்டிய மோடி, இந்தியாவிலும் பெண் ஜனாதிபதி இருப்பதை பெருமையாகக் கூறினார்.
நமீபியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்தியா கொரோனா காலத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பயிற்சி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கியதையும் நினைவுபடுத்தினார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை நமீபியாவுக்கு வழங்கும் வகையில் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தற்போது 15 நாடுகளில் பயன்படுகிறது என்றும் 10 லட்சம் பேர் பயன்பெறும் அளவுக்கு பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நமீபியாவுடன் நட்பு தொடர்புகள் காலத்தை தாண்டி வலுப்பெறும் என்றும், உத்தியோகபூர்வ சந்திப்பின் போது 800 மில்லியன் டாலருக்கு மேல் இருதரப்பு வர்த்தகம் நடக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அதிகாரத்தின் அடிப்படையில் அல்ல, ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மக்கள் சுதந்திரம் மட்டுமல்ல, சகிப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் ஒன்றிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தையும் பெற வேண்டும் என கூறினார்.