ஜப்பான் மற்றும் சீனாவுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடன் ஆலோசனைகள் நடத்திய அவர், இரு நாடுகளுக்குமிடையே பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அறிவித்தார். ஜப்பானுடனான கூட்டாண்மை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அத்தியாவசியம் என மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவிற்கு ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அறிவித்தார். சிறு, நடுத்தர மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான இணைப்புகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் ஒத்துழைப்பு 2.0, செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் உற்பத்தி, அரிய கனிம வளங்கள் போன்ற துறைகளில் கூட்டாண்மை வலுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதோடு, இந்தியா-ஜப்பான் இடையே பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ஹைட்ரஜன்-அம்மோனியா திட்டம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேர், அதில் 50,000 இந்தியர்கள் உட்பட, ஜப்பானுக்கு அனுப்பப்படும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. மேலும், கலாசார தொடர்புகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜப்பானின் பாரம்பரிய தாருமா பொம்மையை மோடிக்கு பரிசளித்தனர்.
இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்களை அழைத்த மோடி, “இந்தியா வேகமாக வளர்ந்து வரும் உலகின் பெரிய பொருளாதார நாடு. வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களால் இந்தியாவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்தியா எப்போதும் திறந்த கதவாக இருக்கும். ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் சேர்ந்தால் உலகளவில் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கலாம்,” என்று தெரிவித்துள்ளார்.