பாட்னா: பீகாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பீகாரின் பூர்னியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஒரு வந்தே பாரத் ரயில் மற்றும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 11 ஆண்டுகளில், 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 3 கோடி புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

முந்தைய ஆட்சியில், பீகாரின் பூர்னியா மற்றும் சீமாஞ்சல் பகுதிகள் பின்தங்கிய நிலையில் இருந்தன. தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இரட்டை இயந்திர அரசாங்கத்தின் காரணமாக பீகார் முழுவதும் வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளன. இரு கட்சிகளின் தலைவர்களும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். இது பீகாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் வளங்கள் சூறையாடப்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் பீகாரில் நுழையவோ அல்லது தங்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முந்தைய ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் இருந்தது. கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இதன் காரணமாக, பீகார் மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை புறக்கணித்து வருகின்றனர்.
தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ், பீகாரின் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பெண்களின் வருமானம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக பொய்களைப் பரப்புகின்றன. மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. இரு கட்சிகளும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.
அவர்கள் தங்கள் குடும்பங்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, மக்கள் எனது குடும்பம். மக்களின் வளர்ச்சிக்காக நான் அயராது பாடுபடுகிறேன். முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சியில் பீகார் தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சிலருக்கு இது பிடிக்கவில்லை. சிலருக்கு (ராகுல் காந்தி) பீகாரின் உணவு வகைகள் பற்றி கூட தெரியாது. ஆனால் அந்த மக்கள் பீகாரில் சுற்றித் திரிகிறார்கள். தீபாவளி மற்றும் சாத் பண்டிகைகள் விரைவில் கொண்டாடப்பட உள்ளன. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால், இந்த பண்டிகை காலங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஜிஎஸ்ஜி 2.0 வரி விகிதம் வரும் 22 ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கும். குறிப்பாக பெண்களின் சமையல் செலவுகள் கணிசமாகக் குறையும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.