மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டானது.
வேலைவாய்ப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவில்லை என்பதுதான். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், முக்கிய அம்சமாக, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் இளைஞர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் பாலமாக அமையும் என்றும், இதன் மூலம் திறமையான இளைஞர்களை கண்டறிந்து கெளரவமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் 37 மாநிலங்களில் 737 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய், எரிபொருள், பயணம், வாகனங்கள், வங்கி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
குறிப்பாக, எல்&டி, முத்தூட் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ், மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனங்களான 193 நிறுவனங்கள் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளன.