பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விடும் நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெற உள்ளது. இதனை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய நவீன கலைக்கூடம் (NGMA) மூலமாக ஆன்லைனில் நடைபெறும் இந்த ஏலத்தை, கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார். ஏலத்தில் கிடைக்கும் முழு நிதியும், கங்கை நதியை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் அரசாங்கம் தொடங்கிய நமாமி கங்கே திட்டத்திற்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டு 1,300-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் ஓவியங்கள், பாரம்பரிய கலைப்பொருட்கள், சிலைகள், தேவதைகளின் உருவங்கள், விளையாட்டு நினைவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல தனித்துவமான பொருட்கள் அடங்கும். முக்கியமானவற்றில், ஜம்மு & காஷ்மீரிலிருந்து பஷ்மினா சால்வை, தஞ்சாவூர் ராம் தர்பார் ஓவியம், நட்ராஜர் சிலை, குஜராத்தின் ரோகன் கலை, கைத்தறி நாகா சால்வை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அதேபோல், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்ற இந்திய பாரா-விளையாட்டு வீரர்களின் நினைவுப் பொருட்களும் இந்த ஏலத்தின் சிறப்பம்சமாக உள்ளன. இவை இந்திய விளையாட்டின் மன உறுதி மற்றும் வெற்றியை குறிக்கின்றன.
முதல் முறையாக 2019ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த ஏலம் மூலம் இதுவரை ₹50 கோடிக்கு மேல் நிதி திரட்டி, நமாமி கங்கே திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தனக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் இந்த நல்ல காரியத்திற்காக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.