புதுடில்லி: போலி விளம்பரம் செய்த வழக்கில், 14 தயாரிப்புகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, பதஞ்சலி நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பொய்யான தகவல்களுடன் விளம்பரம் செய்ததை எதிர்த்து ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உத்தரகாண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த உத்தரகாண்ட் அரசு பதஞ்சலி நிறுவனத்திடம் 14 பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி கூறியதாவது: உத்தரகாண்ட் அரசின் உத்தரவை தொடர்ந்து, 14 பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்களை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, சமூக வலைதளங்களில் இருந்து விளம்பரங்களை நீக்கியது குறித்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
14 பொருட்கள்
உத்தரகாண்ட் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 14 பதஞ்சலி தயாரிப்புகளின் பட்டியல்: ஸ்வசாரி கோல்ட், ஸ்வசாரி வாடி, ப்ரோன்சம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவளே, முக்தா வதி எக்ஸ்ட்ரா பவர், லிபிடம், பிபிக்ரிட், மதுக்ரித், மதுநாஷினி வாடி எக்ஸ்ட்ரா பவர், லிவமிரித் கோல்ட் அட்வான்ஸ், லிவொமிரித், அட்வான்ஸ், ஐ, கண் சொட்டு மருந்து.
IMA, விளக்கம்
பதஞ்சலி விளம்பர வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருந்தபோது, ஐஎம்ஏ தலைவர் அசோகன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, உச்ச நீதிமன்றம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது பதஞ்சலி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹேமா கோலி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் அசோகன் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி அசோகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி விளம்பரம் செய்துள்ளார். சங்கத்தின் மாத இதழ், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், பிடிஐ செய்தி நிறுவனமும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மன்னிப்பு கோரிய செய்தியை பல நாளிதழ்கள் அதன் அடிப்படையில் வெளியிட்டன. இதையடுத்து பதஞ்சலி தரப்பு வழக்கறிஞரின் கருத்தை அமர்வு கேட்டது. எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார்.