புதுடில்லியில் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை இம்மாத இறுதியில் செயல்படுத்தப்படவிருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது, டில்லி நகரில் காற்று மாசை பெரிதும் உயர்த்திவருகிறது. இதை கட்டுப்படுத்த முதற்கட்டமாக, பழைய வாகனங்களுக்கேர் எரிபொருள் வழங்குவதைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களுக்கு இனி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவிருந்தது. ஆனால், எரிபொருள் நிலையங்களில் வாகன எண்ணங்களை அடையாளம் காண தானியங்கி கேமரா அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது, நகரம் முழுவதும் உள்ள 500 எரிபொருள் நிலையங்களில் 477 ஸ்டேஷன்களில் கேமரா அமைப்பு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 23 ஸ்டேஷன்களிலும் அடுத்த 10 நாட்களுக்குள் வேலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த திட்டம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
இந்த நடவடிக்கை, டில்லியில் வாகன மாசு காரணமாக ஏற்படும் சுகாதார பாதிப்புகளை குறைக்கும் வகையில் மிக முக்கியமானது. மேலும், இது 2018ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் இணைந்து திட்டத்தை விரைவில் அமல்படுத்த ஆலோசித்து வருகின்றனர். புதிய விதிமுறைகள் வந்ததும், பழைய வாகனங்கள் நடமாடும் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம், நகரின் காற்றுத் தரம் மேம்படும் என அரசு நம்புகிறது.