டானா சூறாவளி ஒடிசாவில் கரையை கடந்தபோது, பத்ரக் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு சூறாவளியின் பெயரை வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ‘டானா’ புயல், மணிக்கு 110 கி.மீ. பலத்த சூறாவளி காற்றுடன் ஒடிசா கடற்கரையை கடந்தது. இதனால், கடற்கரையோரம் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்ததன் விளைவாக ‘ஜீரோ கேசுவாலிட்டி’ திட்டத்தின் கீழ் டானா புயலால் யாரும் இறக்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சம் பேரில் 4,859 கர்ப்பிணிப் பெண்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சுகாதார நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். அந்த இடங்களில் 2,201 குழந்தைகள் பிறந்தன, இதில் 18 ஜோடிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 1,858 குழந்தைகள் இயற்கைப் பிறப்பு மூலமும், 343 குழந்தைகள் சிசேரியன் மூலம் பிறந்துள்ளனர்.
பத்ரக் மாவட்டத்தில் உள்ள துசூரி பகுதியில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். டானா சூறாவளியின் போது பிறந்த குழந்தைக்கு ‘டானா’ என்று பெயரிட குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
“நாங்கள் அவருக்கு டானா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம். “நாங்கள் சூறாவளியைப் பற்றி கவலைப்பட்டோம், ஆனால் பிரசவத்திற்குப் பிறகு நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்,” என்று உறவினர் ஒருவர் கூறினார்.