மும்பை: சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்படாவிட்டால் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவது குறித்து பொதுத்துறை வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பது அவசியம்.
இது பராமரிக்கப்படாவிட்டால், வங்கிகள் தனி அபராதம் விதிக்கின்றன. இந்த நடவடிக்கை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சுமையாகும். இருப்பினும், தனியார் வங்கிகள் பொதுவாக சம்பளக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு வரம்பை விதிப்பதில்லை.

எனவே, பொதுத்துறை வங்கிகளை விட சலுகைகளை வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்குகளைத் திறப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சூழ்நிலையில், பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு அபராதத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கிகள் இதை செயல்படுத்தியுள்ளன. குறைந்தபட்ச இருப்புக்கு பதிலாக, டெபிட் கார்டுகள், ஏடிஎம்கள் போன்றவற்றில் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்கள் மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளன.