புதுடெல்லி: இந்தியாவில் மிகவும் சுத்தமான காற்று உள்ள நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி மற்றும் பிற வட நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மாசுபட்டுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
புகைமூட்டம் காரணமாக இருளில் மூழ்கியுள்ள டெல்லியில் காற்று மாசுபாடு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக வட மாநிலங்களில் உள்ள பல நகரங்கள் கவலைக்குரிய தரக் குறியீட்டைக் காட்டுகின்றன.
கடந்த சில நாட்களில், நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரத்தைக் குறிக்கும் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டின் நெல்லை நகரம் காற்றின் தரத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. தஞ்சாவூர் நகரமும் 5வது இடத்தில் உள்ளது. நெல்லை, நஹர்லகான் (அருணாச்சல பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தர பிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா) மற்றும் சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதன்படி காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. காஷியாபாத் (உத்தர பிரதேசம்), பைர்னிஹாட் (மேகாலயா), சண்டிகர் (பஞ்சாப்), ஹாபூர் (உத்தர பிரதேசம்), தன்பாத் (ஜார்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உ.பி.), குஞ்செமுரா (மகாராஷ்டிரா) மற்றும் நொய்டா (உ.பி.) ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.