இன்ஜினியரிங் ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மதிப்பெண்கள் பெற்று சேலம் மாணவி ராவணி முதலிடம் பிடித்துள்ளார். கோவையை சேர்ந்த மாணவர் கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடத்தையும், வேலூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இன்று காலை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 12ம் தேதி விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் எண் அனுப்பப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் இயக்க ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது