புரி: பூரி ஜகன்னாதர் நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டார். 1460-ம் ஆண்டு, அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களை வென்ற பிறகு, தங்க நகைகள் மற்றும் வைரங்களுடன் ஒடிசாவுக்குத் திரும்பினார். அவர் இந்த தங்க நகைகள் மற்றும் வைரங்களை பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.
அப்போதிருந்து, பூரி ஜெகன்னாதர் கோயிலில் சுன பேஷா என்ற சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப நாட்களில், ஜெகன்னாதர் சுமார் 138 தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டார். இப்போது இந்த எண்ணிக்கை 20 முதல் 30 ஆகக் குறைந்துள்ளது. ஜூன் 27 ஆம் தேதி, ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்னாதர் கோயில் அதன் ரத யாத்திரையைத் தொடங்கியது.

ரத யாத்திரையின் 10-வது நாளான நேற்று சுன பேஷா விழா நடந்தது. இந்த விழாவின் போது, ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் 208 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூரி ஜெகந்நாதரை தங்க நகைகள், தங்க பாதங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்று பூசாரிகள் தெரிவித்தனர்.