புதுடெல்லி: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை துப்பாக்கி முனையில் அழுத்தம் கொடுப்பது போல் அவசர அவசரமாக நடத்த முடியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
உலக நாடுகள் மீதான இந்த வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீதம், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசத்துக்கு 37 சதவீதம், வியட்நாமுக்கு 46 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 20 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், இந்தோனேசியாவுக்கு 32 சதவீதம், பாகிஸ்தானுக்கு 29 சதவீதம், தாய்லாந்துக்கு 36 சதவீதம் என பரஸ்பர வரியாக அறிவிக்கப்பட்டது. 10 சதவீத அடிப்படை வரி ஏப்ரல் 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், கூடுதல் வரி ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா விதித்துள்ள இந்த வரிக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்நிலையில், சீனாவை தவிர உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ஆனால் இதில் தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எந்த சூழ்நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது.இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை. எதிலும் அவசரம் நல்லதல்ல, அக்கண்ட பாரத் 2047-ன் குறிக்கோளுக்கு இணங்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முன்னதாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சமீபத்திய அமெரிக்கக் கட்டணங்கள், நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களில் நம் மனதை ஒருமுகப்படுத்தியுள்ளது.
மேற்கத்திய பொருளாதாரங்களுடன் சுதந்திர வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்த முடிந்தால், இந்த ஆண்டு இவை நமக்குச் சாதகமாகச் செயல்பட்டால், நாம் வேறு சூழ்நிலையில் இருப்போம். இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் அதிக அவசரத்திற்கு இந்தியா தயாராக உள்ளது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கு மாறாக, அவசர தேவையில் தேசத்தின் நலன் முதன்மையானது என்று வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.