மத வேறுபாடின்றி அனைத்து சாமானிய மக்களும் ஒரே சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று உத்தரகாண்ட் பாஜக தேர்தல் வாக்குறுதியை அளித்தது. அதன்படி உத்தரகாண்ட் சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
அங்கு பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், “பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துள்ளதால், தற்போது சட்டமாகி உள்ளது. இதற்கான பயிற்சி திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியை விரைவில் அறிவிப்போம்” என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.