பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தவிர்க்கும் வகையில், அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு நட்பு வகையில், இந்திய மூங்கில்களை பயன்படுத்தி வாகன உதிரிப் பாகங்களை உருவாக்கும் திட்டம் சிறப்புடன் நிறைவு பெற்றுள்ளது. இது பிளாஸ்டிக்குக்கே உரிய பல அம்சங்களை கொண்ட ஒரு மாற்று மூலப்பொருளாக அமைந்துள்ளது.
நான்கு வகையான மூங்கில்கள் தேர்வு செய்யப்பட, அவை உயிரி மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பசைப்பொருளுடன் சேர்த்து வேதியியல் முறையில் கலக்கப்பட்டன. இதன் மூலம், பிளாஸ்டிக் போன்ற பாலிமர் அமைப்பைக் கொண்ட புதிய பொருள் உருவாக்கப்பட்டது. இதை வாகனங்களில் பயன்படுத்தப்படும் டேஷ்போர்டு, டோர் பேனல், சீட் பின்புறம் போன்ற உதிரிப்பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.
இந்த புதிய பொருள் 17 வகையான தரத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் அதிக வலிமை, வெப்பம் தாங்கும் திறன், ஈரப்பதம் குறைவாக உறிஞ்சும் தன்மை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. முக்கியமாக, இவை மிகக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்பது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
இந்த முயற்சி, பசுமை தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முக்கியப் படியாக விளங்குகிறது. சுற்றுசூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது ஊக்கமாக இருக்கக்கூடியதுடன், பிளாஸ்டிக்கிற்கு நம்மிடம் உள்ள இயற்கை மாற்றுகளை நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கும் திறனை நிரூபிக்கிறது.