புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஓட்டு திருட்டு சம்பவங்கள் நாடு முழுவதும் திட்டமிட்டு நடைபெறுகின்றன என்றும், குறிப்பாக தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசி சமூகங்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்று வலியுறுத்திய ராகுல், சில உதாரணங்களை வெளியிட்டார்.

கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்க முயற்சி நடைபெற்றதாகவும், மென்பொருள் மூலம் போலியான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சில நிமிடங்களில் பல விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது மனிதர்களால் சாத்தியமில்லை எனவும், இதற்குப் பின்னால் அமைந்துள்ள சாப்ட்வேர் முறைகேட்டை சுட்டிக்காட்டினார். சூர்யகாந்த் மற்றும் நாகராஜ் என்ற நபர்கள் மிகக் குறுகிய நேரத்தில் பல வாக்காளர்களை நீக்கியுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
அதேபோல, காங்கிரஸ் வாக்குகள் அதிகமாக இருந்த பகுதிகளில் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக ராகுல் கூறினார். கர்நாடகா சிஐடி போலீசார் கடந்த 18 மாதங்களில் பல கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதும், தேர்தல் ஆணையம் இந்த முறைகேடுகளை மூடிமறைக்கிறது என்பதற்கே சான்றாகும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மஹாராஷ்டிராவின் ராஜூரா பகுதியில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட சம்பவத்தையும் எடுத்துக்காட்டினார்.
இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இச்சம்பவங்கள் விளங்குகின்றன என்றும், வாக்காளர் முறைகேடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினார். கர்நாடகா சிஐடி போலீசார் கேட்ட விவரங்களை ஒரு வாரத்திற்குள் டில்லி தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இல்லையெனில், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை தாமே பாதுகாக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் இருந்து விடுபட முடியாது எனவும் எச்சரித்தார்.