ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்த உள்ளனர். வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து பெருமளவில் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை சுமார் 300 பேர் பேரணியாக சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுத்திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என ராகுல் காந்தி அழைப்புவிட்டுள்ளார். வாக்குகள் திருடப்படுவது, ‘ஒரு நபர் – ஒரு ஓட்டு’ என்ற அடிப்படை ஜனநாயகக் கருத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளிப்படைத்தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது முயற்சிக்கு பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது மிஸ்டு கால் மூலமாகவோ ஆதரவளிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் முறையில் நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளனர்.