79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செங்கோட்டையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்காதது பெரும் விவாதமாகியது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்தது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில், ராணுவத்தையும் அரசியல் அமைப்பையும் அவமதித்ததாக ராகுல் காந்தியை குற்றம் சாட்டினார். மேலும், அவர் பாகிஸ்தானுக்கும் இத்தாலிக்கும் ஆதரவாக நடந்துகொள்கிறார் என்றும் விமர்சித்தார். ஆகஸ்ட் 15 தேசிய தினமாகும், அது தனிநபரின் பிறந்த நாளோ அல்லது கட்சியின் ஆரம்ப நாளோ அல்ல என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் வழங்கப்பட்டது. அந்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், இந்த ஆண்டு அவர் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்காமல், காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். அங்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார்.
அந்த நேரத்தில் மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தி தேசியக் கொடியை மரியாதையுடன் வணங்கி, தேசிய கீதத்தையும் பாடினார். அந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. ஒரு புறம் பாஜக அவரது பங்கேற்பின்மையை விமர்சித்துக் கொண்டிருக்க, மறுபுறம் மழையில் நனைந்தபடி நாட்டுக்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தியின் வீடியோ மக்களிடையே பரவலாக பகிரப்படுகிறது.