வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவகாரத்தை எதிர்த்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் “வாக்காளர் உரிமை” என்ற பெயரில் பேரணி மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் போது, பிகாரின் பல மாவட்டங்களுக்கு சென்று மக்கள் ஆதரவை திரட்டியும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பொதுமக்களை சந்தித்தும் வருகிறார்.

இந்த பேரணி மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி வருகிறது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்கின்றனர். காலை 10.30 மணிக்கு ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணையும் முதல்வர், பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதன்பின், மாலை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஸ்டாலினுடன் கனிமொழியும் பிகாருக்கு பயணம் செய்துள்ளார். மேலும், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.