புதுடில்லியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், தனக்கு ஒதுக்கப்பட்ட சுனேரி பாக் பங்களாவில் குடியேற ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு முதல் 12 துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வந்த அவர், அவதூறு வழக்கின் பேரில் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதால் 2023ல் இல்லத்தை காலி செய்தார். பின்னர் தாயார் சோனியா காந்தியின் இல்லமான 10 ஜன்பத் முகவரிக்கு இடம்பெயர்ந்தார். அவரது எம்.பி. பதவி மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட பிறகும் அங்கேயே தங்கியிருந்தார்.

மீண்டும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருக்கு கேபினெட் அந்தஸ்துக்கேற்ப டைப் 8 வகை பங்களா வழங்கப்பட வேண்டும். இதனையடுத்து, சுனேரி பாக் சாலையில் அமைந்துள்ள பங்களா எண் 5 அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தில் கர்நாடக பாஜகவின் நாராயணசாமி வசித்த இடம். ஆரம்பத்தில் குடியேற ராகுல் தயக்கம் காட்டினார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளித்து பிறந்த நாளன்று சில பொருட்கள் அந்த இல்லத்திற்கு அனுப்பியுள்ளார்.
ஜூலை 21ல் துவங்கவுள்ள மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன்னதாக ராகுல் அந்த பங்களாவில் நிரந்தரமாக குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், முக்கியமான கட்டத்தை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.