மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா உறவுகளை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், திங்கள்கிழமை கலினின் நகரில் நடந்த விழாவில் ஐஎன்எஸ் துஷில் என்ற கப்பலை அறிமுகப்படுத்தி ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
நேற்று மாஸ்கோ சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப்போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா ராணுவம்-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
உலகிலேயே மிக உயரமான மலையை விட இந்தியா-ரஷ்யா நட்புறவு உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். இனி வரும் காலங்களிலும் இதைத் தொடருவோம் என்றார்.