பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மன்னின் கோரக் நிகழ்ச்சியில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகான் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக எடுத்துரைத்தார். இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.