லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு, ராமாயண புராணத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் இங்கு வர உள்ளது. அருங்காட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்களுக்காக இதைத் திறந்து வைப்பார்.
ராமாயணத்தின் மெழுகு அருங்காட்சியகம் 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. ராமாயணக் கதை நடந்த திரேதா யுகத்திற்கு பார்வையாளர்களை நேரடியாக அழைத்துச் செல்லும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பக்தி மையமாகவும், முக்கிய சுற்றுலா தலமாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், புராணம், தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறனை இணைக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
புதிய ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகத்திற்குள், ராமர், சீதா, லட்சுமணன், பரதன், அனுமன், ராவணன் மற்றும் விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் 50 வாழ்க்கை அளவிலான மெழுகு சிலைகள் உள்ளன.