அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென கீழே விழுந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி கொண்ட விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தவர் என்ற செய்தி பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியது.
20 ஆண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ரமேஷ், விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தார். மீண்டும் லண்டன் திரும்பும்போது அவரது சகோதரர் அஜய் குமாருடன் பயணம் செய்தார். விமானத்தில் ரமேஷ் அமர்ந்திருந்த 11A இருக்கை விபத்தின் போது சீடிலிருந்து தனியாக வெளியேறியதால் அவர் அவசர வெளியேற்றம் வழியாக தப்பியதாக கூறுகிறார். அதே நேரத்தில் 19A இருக்கையில் இருந்த சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேஷ் விபத்து நடந்த அதே பகுதியில் காயங்களுடன் நடந்து சென்றதை பதிவுசெய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவமனை விடுதி அருகே தீக்காயங்களுடன் நடக்கும் அவர் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவில், விமானம் தீப்பற்றிய நிலையில் இருந்து அவர் தப்பிய விதம் தெளிவாக காணப்படுகிறது. இது அவருடைய அதிர்ஷ்டத்தின் சாட்சி எனவும் பலரும் கருதுகின்றனர்.
ஊடகங்களிடம் பேசிய ரமேஷ், தனது இருக்கை உடைந்ததாலும், உடலுக்கு ஏற்பட்ட உந்துவிசையினால் அவசர வழி அமைந்ததாகவும், அதனால் தான் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். விமான விபத்துக்குப் பின் வெளியான வீடியோவில், அவர் நடந்து செல்வதைக் காணலாம். பல உயிர்களை காவு கொண்ட இந்த விபத்தில், ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்துள்ளதோடு, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.