ஐபிஎல் 2025 தொடரின் கிளைமேக்ஸம் நெருங்கி வரும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய RCB, பைனலுக்குள் சென்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடக்கம் முதல் கோப்பைக்காக ஏங்கியிருந்த ரசிகர்கள், இந்த முறையே அந்த கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இதையடுத்து, RCB ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்துள்ளனர். பைனலுக்குச் சென்றதையே கிண்ணம் வென்றதுபோல் கொண்டாடும் நிலையில், சமூக வலைதளங்களில் ‘இனிமே கிரிக்கெட் நாங்க தான்’ என கூறும் அளவுக்கு உற்சாகம் பீக் அளவில் உள்ளது. இதனையடுத்து, பிற அணிகளின் ரசிகர்களை கலாய்க்கும் வேலைக்கும் இறங்கியுள்ளனர்.
இந்த வெற்றியை ஒட்டி, சில ரசிகர்கள் பெங்களூருவை இந்தியாவின் தலைநகராக மாற்ற வேண்டும் என வித்தியாசமான கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லியின் மாசுபாட்டை குற்றமிட்டு, நல்ல வானிலை, ஐடி ஹப்பாக இருப்பது, முதலீட்டாளர்களின் முக்கிய இடமாக இருப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, RCB ரசிகர்கள் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தினை ‘RCB ரசிகர் விழா’வாக அறிவிக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை கர்நாடக முதல்வருக்கே எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கோப்பை எங்களுடையது, இப்போது தலைநகரமும் எங்களுடையது” எனும் வாசகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நம்பிக்கையின் பின்னணியில், RCB இந்த வருடம் கிண்ணத்தை வெல்லும் என்ற உறுதி பெரிதும் காணப்படுகிறது.
மற்ற அணிகளின் ரசிகர்கள் இதற்கு பதிலடி அளித்து வருகின்றனர். “பைனலுக்கு சென்றதுக்கே இவ்வளவு ஆட்டம், வென்றால் என்ன செய்வார்கள்?” என நகைச்சுவையுடன் கருத்துகள் வெளியாகின்றன.
RCB ரசிகர்கள் உற்சாகத்தில் சிக்கி கொண்டாடும் இந்த தருணம், IPL 2025 தொடரின் முக்கியக் கட்டத்தை சிறப்பிக்கிறது.