
புதுடில்லி : ”பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல், சுற்றுச்சூழல் மாசு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறினார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, இந்தியாவில் உயிரி எரிபொருள் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்றும், தற்போது அது நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த காற்று மாசுபாட்டில் 40 சதவீதம் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல் காற்று மாசுபாட்டை குறைக்க முடியாது என்று நிதின் கட்கரி கூறினார். இதற்காக பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வைக்கோல் போன்ற உயிரியில் இருந்து எரிபொருளை தயாரிக்க 400 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்தியாவை உலகின் வாகன மையமாக மாற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கட்கரி கூறினார்.