ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிப்ரவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர். இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் பிப்ரவரி 23-ம் தேதி பானிபட் சென்றடைந்தனர். திருமணத்தின் போது மணமகள் அணிந்திருந்த ‘லெஹங்கா’வைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் சண்டையிட்டனர்.
இந்த ‘லெஹங்கா’வின் விலை ரூ. 20 ஆயிரம். ஆனால் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ‘லெஹங்கா’ வாங்கச் சொன்னோம். மணப்பெண் ஏன் அணியவில்லை என்று சண்டை போட்டனர். இதையடுத்து மணமகளின் குடும்பத்தினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் சண்டை முழு கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில் மணமகனின் உறவினர் ஒருவர் வாளுடன் வந்து தாக்கத் தொடங்கினார்.

பதிலுக்கு மணமகள் வீட்டாரும் வாளை எடுத்து சண்டை போட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பும், கலவரமும் ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சிதறி ஓடினர். இதனால் திருமண மண்டபம் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆனால் ‘லெஹங்கா’ பிரச்சினை ஓயவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்துவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். மணப்பெண் விலை உயர்ந்த ‘லெஹங்கா’ அணியாததால் திருமணம் நிறுத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.