புதுடில்லி: ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பாக அரசும், எதிர்க்கட்சிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாட்டிற்கு சிறந்த எதிர்க்கட்சியும் தலைவர்களும் தேவை. ஜி.எஸ்.டி. 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது நான்கு வரி அடுக்குகளை முடிவு செய்தது பா.ஜ., அல்ல; மாநில நிதியமைச்சர்களின் அதிகார குழு. எதிர்க்கட்சிகள் நான் சொல்வது தவறு என நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயார். எனக்கு அகங்காரம் இல்லை” என வலியுறுத்தினார்.

இதேபோல், ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத்துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஜி.எஸ்.டி குறைப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஆதாயம் தரும். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு வரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சீர்திருத்தங்களுக்கு அரசு இயந்திரங்கள் ஒன்றரை ஆண்டுகளாகவே வேலை செய்து வந்தன” என்றார்.
இந்நிலையில், கேரள காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப், சமூக வலைதளத்தில் பீடி – பீஹார் ஒப்பீடு தொடர்பான பதிவில் தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். “என் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக அந்த பதிவை நீக்கி மன்னிப்பு கேட்க உத்தரவிட்டேன்” என தெரிவித்தார்.