புதுடில்லியில் இன்று (அக்டோபர் 1) ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், 5.5 சதவீதமாகவே நீடிக்கப்படும் என கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனின் வட்டியைத் தான் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது. இதை இரு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, பொருளாதார நிலைமை மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் உலகளாவிய சந்தை நிலைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.8 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி கொள்கைகள் மற்றும் சர்வதேச வர்த்தக நிலைமைகள் இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு வங்கி வட்டிகளின் நிலைப்பாட்டை பாதுகாக்கும் என்பதோடு, கடன் மற்றும் முதலீட்டு துறைகளுக்கு சீரான நிலையை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். பொதுமக்களுக்கு உடனடியாக எந்த சுமையும் இல்லாமல், தற்போதைய வட்டி நிலைகள் தொடரும் என்று கூறப்படுகிறது.