மும்பை: வங்கிச் சேவைகள், நிதிச் சேவைகள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து, நாட்டு மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கும் நோக்கில், வாட்ஸ்அப் சேனலை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களுக்கான ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஏற்கனவே எஸ்எம்எஸ், தொலைக்காட்சி – செய்தித்தாள்கள் – டிஜிட்டல் தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்த விழிப்புணர்வை அளித்து வருகிறது. வாட்ஸ்அப் சேனல் மூலம் பரந்த பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் போலிச் செய்திகளும், மோசடியான தகவல்களும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. அதுவும் நிதிச் சேவைகளில். அதை மனதில் வைத்து, வாட்ஸ்அப் சேனல் மூலம் நாட்டு மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் சேனலின் சந்தாதாரர்கள், ‘மோசடியைத் தவிர்ப்பது எப்படி?’, ‘வங்கி வாடிக்கையாளர்களின் உரிமைகள்’, ‘சமீபத்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் மற்றும் கொள்கைகள்’, ‘வங்கிகள் தொடர்பான போலிச் செய்திகள்/தகவல்கள் பற்றிய விளக்கம்’ போன்ற தலைப்புகளில் தகவல்களைப் பெறலாம். சேர விரும்பும் பயனர்கள் பின்வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து சேரலாம்.
ரிசர்வ் வங்கியின் இந்த சேனல் 99990 41935 என்ற எண்ணைக் கொண்ட வணிகக் கணக்கின் மூலம் இயக்கப்படுகிறது. தொடர்புடைய கணக்கு மெட்டாவிடமிருந்து சரிபார்ப்புக் குறியைப் பெற்றுள்ளதை உறுதிசெய்து பயனர்கள் இணையலாம்.