புதுடெல்லி: பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வங்கி கணக்குகளை தாங்களாகவே கையாளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- எந்த வயதினரும் வங்கிக் கணக்கு தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையை பாதுகாவலராக நியமிக்க வேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வங்கிக் கணக்குகளைத் தாங்களாகவே கையாளலாம். அவர்கள் சேமிப்புக் கணக்குகளைத் திறந்து, சொந்தமாக டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்படலாம். இணைய வங்கி வசதிகளையும் வழங்கலாம்.
இது வங்கியின் முடிவிற்கு உட்பட்டது. குழந்தைகளின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.