மும்பை: கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்க வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யும் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறியவும்) வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதால், தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் குறை தீர்க்கும் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், KYC படிவங்களை சமர்ப்பிக்க வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் புகார்களைத் தீர்க்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகள் தங்கள் சொந்த நலனுக்காக வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும், கடன் வசூலிக்கும் போது முறைகேடான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். டிஜிட்டல் மோசடிகளைத் தடுப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.