திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக, அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, திருமலையில் 3-வது கியூ வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஓய்வு அறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்.

பக்தர்களுக்கு விளக்குகள், கழிப்பறைகள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் பாதுகாப்பு போன்ற வசதிகள் வழங்கப்படும். திருமலையில் உள்ள சில தோரணம் மற்றும் சக்கர தீர்த்தம் ஆகிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையின்படி, உலகம் முழுவதிலுமிருந்து ஏழு மலைகளில் கோயில்களைக் கட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.
சைபர் குற்றங்களைத் தடுக்க திருமலையில் ஒரு சைபர் பாதுகாப்பு ஆய்வகம் அமைக்கப்படும். அனைத்து கோயில் துறைகளும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் திருமலை திருப்பதி நிர்வாக அலுவலகம் திருமலையில் அமைக்கப்படும். வேதங்களைப் படித்த வேத அறிஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்க ஆந்திர அரசு முன்வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.