பாட்னா: தேர்தல் வியூகவாதியாக இருந்த பிரசாந்த் கிஷோர் பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சி அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.
இதனிடையே, பீகார் மாநிலம் போஜ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்தார்.
பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
வழியில்லாத சிலர் கல்வி கற்க முடியாமல் தவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒருவரின் பெற்றோர்கள் மாநில முதலமைச்சராக இருந்து, அவரால் 10-ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? இது அவர்களின் கல்வியின் மீதான அக்கறையை காட்டுகிறது.
9-ம் வகுப்பு தோல்வி பீகாரின் வளர்ச்சிக்கு வழிகோலுகிறது. அவருக்கு ஜிடிபிக்கும் ஜிடிபி வளர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாது. பீகார் எப்படி வளர்ச்சியடையும் என்று சொல்லப் போகிறார்.
முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் என்பதால் தான் அவர் ஆர்ஜேடி தலைவர். குடும்பப் பெயரைத் தாண்டி நற்பெயரை உருவாக்க தேஜஸ்வி கடுமையாக உழைக்க வேண்டும். செயல்கள் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும்.
தேஜஸ்வி அரசு வேலை தருவதாக கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறார். பீகாரில் 23 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இது மாநில மக்கள் தொகையில் 1.97 சதவீதம் ஆகும். தேஜஸ்வி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் 98 சதவீத மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
தேஜஸ்வியால் சோசலிசம் பற்றி 5 நிமிடம் கூட பேச முடியாது. அத்தகைய கருத்துக்களை விவாதிக்க அவருக்கு தேவையான புரிதல் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.