மும்பை: கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், முன்னறிவிப்பின்றி பிசினஸ் கிளாஸிலிருந்து எகானமி வகுப்பிற்குத் தரமிறக்கப்படும் தொடர் சம்பவங்களுக்காக ஏர் இந்தியாவை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த சிக்கலை தீர்த்துவிட்டதாக கூறி சமூக ஊடகங்களில் விமான நிறுவனம் பொய் சொல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஏர் இந்தியாவின் விமான சேவை குறித்து 3 முறை கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இன்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ளார்.
இதற்காக விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தார். அப்போது, பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்த ரிக்கி கேஜை ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் அவமரியாதை செய்து, எகானமி வகுப்பில் பயணம் செய்யும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ரிக்கி கேஜ் தனது விரக்தியை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், ‘ஒரு வருடத்தில் எனக்கு இப்படி நடப்பது இது 3வது முறையாகும். பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் பதிவு செய்திருந்தேன். பெங்களூரு செல்ல மும்பை விமான நிலையம் சென்றேன்.
கவுண்டரில் இருந்த ஊழியர் நிஷிதா சிங், என்னை எகானமி வகுப்பில் செல்லும்படி கேட்டு மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். தங்கள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏர் இந்தியா தெரிந்து கொள்ள வேண்டும். நான் இன்னும் விமான நிலையத்தில் இருக்கிறேன். ஆனால் விமானம் காலை 9.25 மணிக்கு புறப்பட்டது என்றார்.
மேலும், தனக்கு எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்றும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது பதிவிற்கு பதிலளித்த ஏர் இந்தியா, ஒரு தீர்வை வழங்குவது குறித்து உங்களுக்கு செய்தி அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இதுவரை தீர்வு காணப்படவில்லை, ஏர் இந்தியா பொய் சொல்கிறது என்று ரிக்கி கேஜ் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளார்.