மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது, மத நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால், இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் வெடித்தது.

இதில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கலவரத்தில் 33 போலீசார் காயம் அடைந்தனர்.
கலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான செலவு வசூலிக்கப்படும் என்றும், செலவை ஏற்காவிட்டால், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தேவைப்படும் இடங்களில் புல்டோசர் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு, உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வரும் அதே போக்கில் செயல்படுவதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இந்த எச்சரிக்கை, அரசியல் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.