
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாலை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், கடந்த ஓராண்டாக அரசிடம் நிலுவையில் உள்ள பணத்தை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலுவைத்தொகை, ரூ.89,000 கோடியாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, அவர்கள் மாவட்ட கலெக்டர்களிடம் நேரில் சென்று முறையிடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கொண்ட கூட்டணி அரசு நிலவுகிறது. கடந்த ஆண்டு ஜூலை முதல் மேற்கொள்ளப்பட்ட சாலை பணி ஒப்பந்தங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பொதுமக்கள் மத்திலும் பரவி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் கூறுவதாவது, கடந்த ஆண்டு அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடந்ததால், அரசின் நிதி விடுவிப்பு பணிகள் காலதாமதமாகி விட்டதாக முதலில் எண்ணினர்.
மாநிலம் முழுவதும் சுமார் ஐந்து லட்சம் ஒப்பந்ததாரர்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொருவருக்கும் ₹1 லட்சம் முதல் ₹20 கோடி வரை பணம் நிலுவையில் உள்ளது. இதனால், அவர்களால் தேவையான பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலையைத் தெரியப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்கும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறதென மஹாசங்கத் தலைவர் மிலிந்த் போஸ்லே விளக்கியுள்ளார்.
சாலை அமைப்புத் திட்டங்கள் என்பது மாநிலத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. ஆனால் ஒப்பந்ததாரர்களின் நிலை தற்போது மிகுந்த நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடி நீங்க, அரசின் தலையீடு அவசியமானதாக இருக்கிறது. போராட்டங்கள் மேலும் விரிவடையாமல், ஒப்பந்ததாரர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது இந்த விவகாரத்தின் முக்கிய கோரிக்கையாக அமைந்துள்ளது.