சூரத்தில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட ஒரு இளம்பெண், தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. உத்தரபிரதேசத்தின் அலிகாரில் வசிக்கும் 16 வயது அனம்தா அஹ்மத், மூன்று ஆண்டுகளுக்கு முன் மின்சார விபத்தில் தனது வலது கையை இழந்தார். பின்னர், உறுப்பு தானம் செய்த ரியா என்ற பெண்ணின் கை, மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அனம்தாவுக்கு பொருத்தப்பட்டது. ரியா கடந்த ஆண்டு மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்தார், ஆனால் அவரது கை, சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவை தானமாக வழங்கப்பட்டு எட்டு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அனம்தா, தன்னுடைய புதிய வாழ்க்கைக்குக் காரணமான ரியாவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடிவு செய்தார். மும்பையிலிருந்து குஜராத்தின் வால்சாத் வரை பயணம் செய்த அவர், ரியாவின் சகோதரர் சிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டினார். அந்த நேரத்தில் 14 வயது சிவத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. “இது என் சகோதரி ரியாவின் கை,” என்று உணர்ந்த சிவம், அவளைப் பார்த்த தருணத்தை நினைத்து உணர்ச்சி வசப்படினார்.
வால்சாத்தின் தித்தல் கடற்கரையில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில், இரு குடும்பங்களும் ஒன்றிணைந்தன. அனம்தாவை தழுவிய ரியாவின் தாய் த்ரிஷ்ணா, “அவளைப் பார்த்த போது என் ரியா மீண்டும் உயிர்ப்பெற்றது போல உணர்ந்தேன். அனம்தா இப்போது என் மகள். ரியா எப்போதும் அவளுக்குள் வாழ்வாள்,” என்று கூறி, தனது மகனின் கையில் ராக்கி கட்ட இத்தனை தூரம் பயணம் செய்த அனம்தாவுக்கு நன்றியை தெரிவித்தார்.
ரியாவின் சகோதரர் சிவம் மிஸ்திரி, “அனம்தாவின் கைகள் ரியாவின் கைகளைப் போலவே இருந்தன. இந்த முறை அவள் என்னைச் சந்திக்க வந்தாள், அடுத்த வருடம் நான் அவளைச் சந்திக்கப் போகிறேன். இந்த பந்தம் என் வாழ்நாள் முழுவதும் தொடரும்,” என்றார். இந்த சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. இரு குடும்பங்களின் பாசமும் நன்றியும், உயிர் தானத்தின் அர்த்தத்தை மறுபடியும் வெளிப்படுத்தியது.