மங்களூரு நகரில், தொழிலதிபர்களிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி, சொகுசு பங்களா, வெளிநாட்டு மது, மலேஷிய பெண்கள் ஆகியவற்றின் உதவியுடன் ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த ரோஹன் சல்டானா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் பட்டுச்சேலை நிறுவனமொன்றை நடத்தும் தொழிலதிபர், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் தேவைப்பட்ட நிலையில், ‘பைனான்ஸ் கன்சல்டென்சி’ நிறுவனத்தின் மூலம் சந்தித்த விமலேஷின் அறிமுகத்தில், ரோஹனை தொடர்பு கொண்டார்.
ரோஹன், கடன் வாங்க உதவுவதாக நம்பிக்கை அளித்து, தொழிலதிபரிடமிருந்து ஸ்டாம்ப் பேப்பருக்கென 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் பல வாரங்கள் கடந்தும் எந்த கடனும் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தராததால், தொழிலதிபர் மங்களூரு நகர போலீசில் புகார் செய்தார். பின்னர் விசாரணையின் மூலம், ரோஹன் தலைமறைவானது தெரியவந்தது. இதுபோலவே பல தொழிலதிபர்களும் ரோஹனிடம் ஏமாறியதாக புகார் அளித்தனர்.
தலைமறைவாக இருந்த ரோஹன், மங்களூரு புறநகரில் ஜப்பினமொகரு என்ற இடத்தில் உள்ள சொகுசு பங்களாவில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பங்களாவில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, வெளிநாட்டு மது பாட்டில்கள், ஆடம்பர வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், ரகசிய அறைகள் மற்றும் மலேஷிய பெண்கள் இருந்தனர். தொழிலதிபர்கள் வந்தால் ஒளிந்து கொள்ளவே அந்த ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. வசதிகளை பார்த்த தொழிலதிபர்கள், ரோஹனை பெரும் தொழிலதிபராக நம்பி பணத்தை ஒப்படைத்தனர்.
மொத்தமாக, இவர் நாடு முழுவதும் பல தொழிலதிபர்களிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி, 200 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெறும் மூன்று மாதங்களில் மட்டும் 45 கோடியை சுருட்டியிருக்கிறார். அந்தப் பணத்தில் பல சொத்துகளும் வாங்கப்பட்டுள்ளன. இவரது வங்கி கணக்கில் மட்டும் 40 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.