லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் மதமாற்றக் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது 40 வங்கிக் கணக்குகளில் ரூ.106 கோடி தொகை இருப்பது, அந்த பணம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது எனத் தெரியவந்துள்ளது.

மாதம்பூர் பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் மற்றும் நஸ்ரின் எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு, ஏழைகள், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரிடம் மதமாற்றம் மேற்கொள்வதற்காக நிதியுதவி, திருமண வாக்குறுதி, மிரட்டல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
சங்கூர் பாபா தொடக்கத்தில் சைக்கிளில் வளையல் மற்றும் தாயத்து விற்பவராக இருந்தார். தற்போது, பல வங்கிக் கணக்குகள், சொகுசு வாழ்க்கை மற்றும் சட்டவிரோத நிலப்பொருட்களுடன் தொடர்புடையவராக மாறியுள்ளார். பால்ராம்பூரில் உள்ள அவரது சொகுசு பங்களா சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக நிரூபிக்கப்பட்டதால், அதனை புல்டோசர் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், 2023-இல் மஹாராஷ்டிராவின் லோன்வாலாவில் ரூ.16.49 கோடி மதிப்பில் சொத்து வாங்கியிருக்கிறார். அந்த சொத்து விற்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜலாலுதீன் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தைச் சேர்ந்தவராகவும், அங்கு ஒரு காலத்தில் கிராமத் தலைவராக இருந்தவராகவும் தெரியவந்துள்ளது.
அமலாக்கத்துறை, இவரது ஆதரவாளர்கள் மற்றும் பணம் பெற்ற மதம் மாறியவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.