மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஆய்வகங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில், பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் மலேரியா பரிசோதனையில் தவறான முடிவு வெளியான சம்பவம் இதை தீவிரமாக்கியுள்ளது.
ஒரு தாய் தனது 6 வயது மகனை காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஆய்வக பரிசோதனையில் மலேரியா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவமனையில் மீண்டும் பரிசோதித்ததில் மலேரியா இருப்பது உறுதியாகி, குழந்தை பல நாட்கள் அவதிப்பட்டது. இதனால் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது, மாநிலத்தில் உள்ள 85 ஆய்வகங்களை நடத்தும் ஒப்பந்தம் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு 500 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 60–70 கோடி ரூபாய் மட்டுமே கருவிகள், இயந்திரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும், தரநிலை சான்றிதழ்கள் பெறப்படவில்லையெனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர் என்றும், மற்ற நிறுவனம் பல மாநிலங்களில் தடைசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிறுவனங்களின் கீழ் நாளொன்றுக்கு சுமார் 40,000 பரிசோதனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தவறான மற்றும் குழப்பமான முடிவுகளை அளிக்கின்றன. இதனால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும் அபாயம் அதிகரித்து வருவதாகவும், ஊழலின் அளவு 400 கோடிக்கு மேல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.