கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீதத்தைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ பாராட்டியிருந்தார். அதை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக, சிவக்குமார் எடுத்த இந்த நடவடிக்கை கட்சியினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம், பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் குறித்த விவாதத்தின் இடையே நிகழ்ந்தது. பாஜக உறுப்பினர்கள் அந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் அரசு பொறுப்பு என குற்றஞ்சாட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டி.கே. சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் கீதத்தை பாடியதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் உள்பட அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் உள்ள டி.கே. சிவக்குமார், இந்த செயல் மூலம் தாம் அணி மாறப்போகிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், அவர் தன்னை ஒரு பிறவி காங்கிரஸ்காரர் என்றும், எப்போதும் காங்கிரஸிலேயே தொடருவேன் என்றும் உறுதியாக தெரிவித்தார். இதன் மூலம் கட்சியிலிருந்து பிரிவதற்கான வாய்ப்புகளை மறுத்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள், காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் துணை முதல்வரின் செயல் ஒன்றோடொன்று முரண்படுவதாகக் கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் கர்நாடக அரசியலில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. வருங்காலத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.