இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கூட்டணிக் கட்சிகளை அமைதிப்படுத்தும் சலுகை அறிவிப்பாக மட்டுமே இருப்பது வெட்கக்கேடானது.
தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கூட அன்றாடம் மக்களின் பசியை போக்கும் விவசாயத்திற்கு கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது, நாட்டு மக்களின் நலனில் பாஜக அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது.
தங்கம், வெள்ளி, கைபேசி போன்ற விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் கூட அன்றாடம் மக்களின் பசியைப் போக்கும் விவசாயத்துக்குக் கொடுக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. விவசாயத்தை முற்றிலும் அழித்துவிட்டு, ‘2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்’ என்ற அறிவிப்பு கேலிக்கூத்தானது. வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கணக்கான நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது.
பாஜக அரசின் முக்கிய கூட்டணிக் கட்சிகள் பீகாருக்கு 26,000 கோடியும், ஆந்திராவுக்கு 15,000 கோடியும் ஒதுக்கிய இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் இந்தியாவின் பிற மாநில மக்களையும் வரிசையில் நிறுத்தியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தானா? மற்ற மாநில மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே பின்தங்கிய மாவட்டம் ஆந்திரா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் கடந்த 11 ஆண்டு கால நிதிநிலை அறிக்கையில் பாஜக அரசு எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காதது ஏன்?
தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கைகளும் தொடர் பழிவாங்கல் போல் காட்சியளிக்கிறது. தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி, எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தாததைக் கண்டித்து, வேறு வழியின்றி, ‘வரிகொடா’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, தமிழக மக்களை, பரிதாப நிலைக்கு, பா.ஜ.க, அரசு தள்ளியுள்ளது. மொத்தத்தில் பா.ஜ.க அரசின் 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக அரசு புரிந்துகொண்டு செயல்படுத்தத் தவறிய கற்பனையான அறிக்கை. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை முற்றிலுமாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் இருந்து இந்தியா முழுமைக்கும் பாஜகவின் வீழ்ச்சி நிச்சயம் தொடங்கும் என சீமான் ஆவேசமாக கூறினார்.